Wednesday, January 26, 2011

மொழிப்போரின் மாவீரர்கள் 1

கோடம்பாக்கம் ரெயில்வே திடலில் தமிழ் காக்க தன் உடலை தீக்கு தந்து கருகிப் போன சிவலிங்கத்திற்கு வீரவணக்கம் செலுத்த ஏராளமான தி.மு.க.தொண்டர்களும் பொதுமக்களும் கூடினார்கள்.அங்கே சிவலிங்கத்தின் உடல் பற்றி எரியும்போது 'தமிழ் வாழ்க இந்தி ஒழிக'என எரியும்போதுகூட மொழி உணர்வோடு முணுமுணுத்து செத்த நிகழ்ச்சியை நேரிலே பார்த்து நெஞ்சம் பதறுகிறான் ஒரு இளைஞன்.கருகிய சிவலிங்கத்தின் உடலை பார்த்து கதறுகிறான்.
அவன் பெயர் அரங்கநாதன்.ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.ஒய்யாலி என்பவரின் மூன்றாவது மகன்.தாய் தந்தையை இழந்தவன்.தபால் தந்ததி துறையில் பணிபுரிபவன்.முரசொலியும் கையுமாகவே எப்போதும் திரிந்த தி.மு.கழகத்தின் தீவிர உறுப்பினன்.சிலம்பாட்டம்,மான்கொம்பு சுற்றுதல் போன்ற வீர விளையாட்டுகளில் தேர்ச்சி பெற்றவன்.தன் வயதொத்த வாலிபர்களால்'குரு'என்று அழைக்கப்பட்ட 34 வயதுள்ள இளைஞன்.


அழகு மனைவி மல்லிகா.மகன்கள் அமுதவாணன்,அன்பழகன்,ரவி என்கிற அருமைப் புதல்வர்களுடன் விருகம்பாக்கம் பெருமாள் கோயில் தெருவில் குடியிருந்தான்.


தன் கண்ணெதிரே எரிந்து கருகிப் போன சிவலிங்கத்தின் நினைவு அவன் கண்ணைவிட்டு மறையவில்லை.இரவு முழுதும் தூங்கப்பிடிக்காமல் யாருடனும் பேசாமல் அப்படியும் இப்படியுமாக நடமாடுகிறான்.தானும் தமிழுக்காக ஏதாகிலும் தியாகம் செய்யவேண்டுமே என்று தீவிரமாக சிந்திக்கிறான்.பிறகு ஒரு முடிவாக உட்கார்ந்து பேரறிஞர் அண்ணா,நாவலர்,கலைஞர்,மதியழகன் ஆகிய தி.மு.க.தலைவர்களுக்கு கடிதங்கள் எழுதுகிறான்.


"இந்திய அரசின் ஏகாதிபத்திய கொள்கையை எதிர்த்து நான் தீக்குளிக்கப் போகிறேன்.தமிழுக்காக நான் என்னுயிரைத் தியாகம் செய்கிறேன்."என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு இரவு ஒரு மணிக்கு மேல் விருகம்பாக்கம் நேஷனல் திரையரங்கம் அருகே சென்று மண்ணெண்ணையை தன் உடலில் ஊற்றித் தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டு தன் தேக்குமர தேகத்தை தீக்குத் தந்துவிட்டு தியாகியானான் விருகம்பாக்கம் அரங்கநாதன்.


தமிழுக்கு தன்னை அர்ப்பணித்த அரங்கநாதனுடைய உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராஜேந்திரனை தி.மு.கழகம் தலைமைக் கழக பிரதிநிதியாக அனுப்பி வைத்தது.மறைந்த அந்த மகத்தான தியாகியின் பெயரில் கலைஞர் அவர்கள் பாலம் ஒன்றினை சென்னையில் அமைத்தார்.அவனுடைய நினைவைப் போற்று வகையில் விருகம்பாக்கம் விநாயகா சாலையில் கல்லறை அமைக்கப்பட்டு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment