Monday, May 9, 2011

அந்தப் பிஞ்சு மலர்களின் அழுத்தமான நிறத்தைக் கூட்ட ...

"ந்தக் காலங்களில் கிராமங்களில் ஐந்து வயதில் 'ஏடு தொடங்குதல்' என்று ஒரு சடங்கு செய்வார்கள். குழந்தையை உட்காரவைத்து தாம்பாளத்தில் அரிசியை பரப்பி குழந்தையின் விரலைப் பிடித்து 'அ னா ஆ வன்னா' எழுத வைப்பார்கள். அந்தச் சடங்கு கோயிலில் நடக்கும்.பிறகு,அங்கிருந்து வீட்டுக்கு வந்ததும் பனையோலைகளில் உயிரெழுத்து மட்டும் எழுதிக் கொடுத்து,படிக்கச் சொல்லித் தருவார்கள்.

அப்படி ஏடு துவங்கும் சடங்கைச் செய்து வைப்பதற்கென ஒரு அண்ணாவியும் இருப்பார்.அவர் தேவாரம்,திருவாசகம் பாடவும்,விளக்கிப் பொருள் சொல்லவும் தெரிந்தவராக இருப்பார்.பள்ளிக்கூடம் வந்தபிறகு ஏடு தொடங்குதல் மறைந்துப் போகத் தொடங்கியது.ஆனாலும் பள்ளியில் பிள்ளைகளுக்கு டீச்சர் கையைப் பிடித்து அ னா ஆ வன்னா என்றால் என்னவென்றே தெரியாத ஆங்கிலக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது."


* மா.அரங்கநாதன்

Sunday, April 3, 2011

Monday, February 7, 2011

"யுத்தம் செய்"வது - யாருடன்?

 யுத்தம் செய் திரைப்படத்தின் சிறப்புகாட்சியை பேஸ்புக்கர்களுக்காக ஏற்பாடு செய்த சேரனுக்கு எங்களின் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.படத்தின் ஆரம்ப காட்சி முதல் இறுதிகாட்சிவரை ஆதிக்கம்  செல்லுத்துவதில்  இசையமைப்பாளரும்,ஒளிப்பதிவாளரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கின்றனர்.சேரனுக்கு ஒரு தங்கைக்   கதாபாத்திரத்தை உருவாக்கி  கனக்கச்சிதமாய் அவரை தன்  கதாப்பாத்திரத்துடன் ஒன்றிவிட செய்திருக்கிறார் இயக்குனர்.முதல் பாதியில் வரும் பெரும்பாலான காட்சிகள் ஜென் கவிதைகள் போலவே அமைந்துள்ளது ( இதெல்லாம் இல்லாத மிஷ்கின் படம் ஏதாவது உண்டோ? ).இரவில் அந்த நடைபாலத்தில் நடக்கும் சண்டை காட்சியை காணும்போது ஊமைவிழிகள் படத்தில் அருண் பாண்டியனின் ஒரு சண்டை காட்சி நியாபகம் வருகிறது.இந்தப் படத்தில் இசையை தாண்டி வசன  உச்சரிப்புகளை தாண்டி,ஆட்டோ,பைக்,கார் என வண்டிகளின்  சத்தமே அதிகமாய் இடம்பெறுகிறது. கணித  பாடத்தில்  வரும் ஜாமெட்ரி வரைபடம் போலவே உள்ளது  காட்சியமைப்புகள்.சாருவை இன்னும் கூட  கூடுதலாய்   பயன்படுத்தியிருக்கலாம்,கன்னித்தீவு பொண்ணா பாடலில் அமீரின் நடனம் ஜோர்.இந்த படத்தின் மைய்யக்கருவை சற்று உற்றுநோக்கவெல்லாம் தேவையில்லை. சாதரணமாய் நோக்கினாலே தெரிந்துவிடுகிறது. பாதிக்கப்படுவது பிராமணக் குடும்பம்,அந்த பிராமணக் குடும்பத்திற்கு ஆதரவாக பேசப்படும்  வசனம் "கொஞ்சம்  அறிவ வச்சுகிட்டு இவங்களே இவ்ளோ அநியாயம் பண்ணும்போது நெறைய அறிவ வச்சிகிட்டு இருக்குற நாங்க எவ்ளோ பண்ணுவோம்".இதை கேட்கும்போதுதான் ஜென்டில் மேன்,அந்நியன் போன்ற திரைப்படங்களில் ஷங்கர் தூக்கிப்பிடித்த  கொடியை மிஷ்கின் தாங்கிப்பிடிக்கிறாரோ என்று சந்தேகம் வருகிறது.

ஏனோ என் விழியில் நீர் சுரத்தது.


சனிக்கிழைமை இரவு சென்னை கோயம்பேட்டிலிருந்து பேருந்து மூலம் திருப்பத்தூர் சென்றுகொண்டிருக்கும் வேலையில் வழக்கம்போலவே இரவை நேசித்துக்கொண்டிருந்த மணிகளில்  நான் அறிந்திருக்கவில்லை என்னுடைய இந்த பயணம்  இதுவரை எனக்கு பரீச்சயம் இல்லாத ஒன்றென்று.விடியற்காலையில் திருப்பத்தூர்,அங்கிருந்து ஒரு பேருந்து மாறி புதூர் நாடெனும் மலைகிராம்.பின் அங்கிருந்து பதினான்கு மைல்களுக்காக இன்னொரு பேருந்துமாறி கடைசியில்  நோக்கிய இடத்தை வந்தடைந்தோம்.எத்தனை இரம்மியமான சூழல்,மரங்களும் செடி, கொடிகளும், நகரத்திலேயே பிறந்து வளர்ந்த காரணத்தினாலோ என்னவோ இது போன்ற இடங்களை காணும்போதெல்லாம் வேறொரு  உலகத்தில் என் காலடி பட்டுகொண்டிருக்கிறது என்பது  போலவே நினைத்து கொள்கிறேன். பேருந்தைவிட்டு இறங்கியபோதே எங்களை அழைத்துசெல்ல வந்திருந்த தோழர் சிவராஜ் எங்களை வரவேற்று அந்த மலை கிராமத்தின் அரசு பள்ளிக்கு எங்களை அழைத்துக்கொண்டு போனார்."குக்கூ குழந்தைகள் வெளி" என்ற கிராம மாணவர்களின் அடிப்படை தேவைகளையும் அவர்களுக்கு நம் பண்பாடும் கலாச்சாரமும் சார்ந்த கலைகளையும்  பயிற்றுவிக்கும் ஒரு இயக்கம்.அந்த இயக்கத்தின் ஒரு நிகழ்விற்குதான் நாங்கள் சென்றுகொண்டிருந்தோம்.போகிற வழியில் இந்த குக்கூ அமைப்பின் நிகழ்வுகளைப்பற்றி எங்களுக்கு விரிவாக விளக்கமளித்தார். பள்ளிக்கு சென்ற வழியில் எதிர்வந்த அத்தனை மனிதர்களிடமும் எங்களை அவர்களிடத்தில் அறிமுகம் செய்துகொண்டே சென்றார். பள்ளியை அடைந்த பின் அங்கிருந்த குழந்தைகளை காணுகிறவரையில் தான் நாங்கள் பெரியவர்களாய் இருந்தோம். அதன் பின் நாங்கள் சீருடை அணியாத அவர்களின் சிநேகிதர்களாகவே ஆனோம்.எங்களை போன்றே இந்தியாவின் பல பகுதிகளில் வந்திருந்த ஆர்வலர்களிடத்தில் எங்களை அறிமுகப்படுத்திகொண்டு பின் இணைந்தே செயல்பட்டோம்.கவிஞர் வையம்பட்டி முத்துசாமி,ஓவியர் மற்றும் சிற்பக் கலைஞர் எழில்,நாடக கலைஞர்கள் குமார் & நந்து,இயக்குனர் குமரன் கிராமிய இசைக்கலைஞர் மற்றும் உதவி இயக்குனர் செந்தமிழ்செல்வன்,பெங்களூரு தியாகராஜன் மற்றும் அவரது நண்பர் மற்றும் அக்கா அழகேஸ்வரி மற்றும் ஏராள- மானோர் அங்கு வந்திருந்தனர். அறிமுகப்படலம் முடிந்தபின் அந்த பள்ளி மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள்,சிற்பங்கள் என அனைத்து படைப்புகளையும் தோழர் சிவராஜின் விவரிப்போடு கண்டு களித்தோம்.சாப்பிட அழைப்பு வந்தபோது முதல் ஆளாய் காணாமல்  போனேன்  என்ற பெருமையை இந்த தடவையும் நான்தான் பெற்றேன் என்பதில் மகிழ்வே. காலைப் பசியை  எலுமிச்சை சாதம் தீர்துக்கொண்டிருந்த போது நாங்கள் யாருமே பல் துலக்கவில்லை என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.சாப்பிட்டபின் தோழர் முத்துசாமியை தனியாய் தள்ளிகொண்டு போய் அவரது பாடல்களை ( சிறுவர் பாட்டு,பொதுவுடைமை பாட்டு, கார்கில் பாட்டு மற்றும் ஏராளமான பாடல்கள் ) அவரது குரலிலேயே கேட்டது உள்ளம் நிறைந்த மகிழ்வு.பின்தான் ஞானோதயம் பெற்று குளிக்க சென்றோம்.அந்த மலைகிராமத்தில்தான்  எங்களின்  சுதந்திரங்களை பல விதங்களில் உணர்ந்தோம்.குளித்துவிட்டு மீண்டும் குழந்தைகளோடு ஆடல்,பாடல்.அத்தனை மாணவர்களையும் ஒன்றாய்  பார்த்ததில் இந்தியாவின் இந்த மலைபிரதேசத்தில்  ஒரு இளவரசர்களின்  கூட்டமும், அதற்கு இணையான ஒரு இளவரசிகளின் கூட்டமும் காணமுடிந்தது மிகவும் எதிர்பாராத ஒன்று.பின் மதிய சாப்பாடு முடிந்த பின் மாலைநேர  விழாவுக்கு தயாரானது எல்லோர் தரப்பும்.விழாவில் அனைத்து நாடகங்களையும், ஆட்டங்களையும்,கடவுள் வாழ்த்தையும் அந்த மாணவர்கள்  செயல் படுத்திய நேர்த்தியில் தான்,அக்கா அழகேஸ்வரி, குமார்,நந்து, செந்தமிழ்செல்வன், குமரன், எழில், சிவராஜ் மற்றும் ஏனையோர்களின்  உழைப்பும் பொறுமையும் எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது.அந்த குக்கூ குழந்தைகள் வெளி அமைப்பின் நிகழ்வில் தங்களை இணைத்துக்கொண்ட அத்தனை பேருக்கும்  நன்றியும் ஒரு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது,என்னை அழைத்து எங்களுக்கு பொங்கிப்போட்ட  கைகளுக்கு பரிசளிக்க சொன்னபோது ஏனோ என் விழியில் நீர் சுரத்தது.

Friday, January 28, 2011

குக்கூ

குக்கூ குழந்தைகள் வெளி நடத்த உள்ள பண்பாட்டு நிகழ்வுக்கு அனைவரையும் அழைப்பதில் பெரும் உவகை கொள்கிறேன். Feb மாதம் 1 முதல் 10 ஆம் திகதி வரை
 திருப்பத்தூரில் உள்ள வெள்ளிவாசல் என்ற மலைகிராமத்தில் நடக்க உள்ள இந்த நிகழ்வில் பங்கேற்றும் அந்த கிராமத்தில் தொடங்கப்பட உள்ள நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கியும் சிறப்பிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஓவியம் சிற்பம் புகைப்படம் மற்றும் போன்ற கலைகளின் கண்காட்சி நிகழ்வும் நடத்தப்பெற உள்ளது.

Save TN Fisherman.

Wednesday, January 26, 2011

மொழிப்போரின் மாவீரர்கள் 1

கோடம்பாக்கம் ரெயில்வே திடலில் தமிழ் காக்க தன் உடலை தீக்கு தந்து கருகிப் போன சிவலிங்கத்திற்கு வீரவணக்கம் செலுத்த ஏராளமான தி.மு.க.தொண்டர்களும் பொதுமக்களும் கூடினார்கள்.அங்கே சிவலிங்கத்தின் உடல் பற்றி எரியும்போது 'தமிழ் வாழ்க இந்தி ஒழிக'என எரியும்போதுகூட மொழி உணர்வோடு முணுமுணுத்து செத்த நிகழ்ச்சியை நேரிலே பார்த்து நெஞ்சம் பதறுகிறான் ஒரு இளைஞன்.கருகிய சிவலிங்கத்தின் உடலை பார்த்து கதறுகிறான்.
அவன் பெயர் அரங்கநாதன்.ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.ஒய்யாலி என்பவரின் மூன்றாவது மகன்.தாய் தந்தையை இழந்தவன்.தபால் தந்ததி துறையில் பணிபுரிபவன்.முரசொலியும் கையுமாகவே எப்போதும் திரிந்த தி.மு.கழகத்தின் தீவிர உறுப்பினன்.சிலம்பாட்டம்,மான்கொம்பு சுற்றுதல் போன்ற வீர விளையாட்டுகளில் தேர்ச்சி பெற்றவன்.தன் வயதொத்த வாலிபர்களால்'குரு'என்று அழைக்கப்பட்ட 34 வயதுள்ள இளைஞன்.


அழகு மனைவி மல்லிகா.மகன்கள் அமுதவாணன்,அன்பழகன்,ரவி என்கிற அருமைப் புதல்வர்களுடன் விருகம்பாக்கம் பெருமாள் கோயில் தெருவில் குடியிருந்தான்.


தன் கண்ணெதிரே எரிந்து கருகிப் போன சிவலிங்கத்தின் நினைவு அவன் கண்ணைவிட்டு மறையவில்லை.இரவு முழுதும் தூங்கப்பிடிக்காமல் யாருடனும் பேசாமல் அப்படியும் இப்படியுமாக நடமாடுகிறான்.தானும் தமிழுக்காக ஏதாகிலும் தியாகம் செய்யவேண்டுமே என்று தீவிரமாக சிந்திக்கிறான்.பிறகு ஒரு முடிவாக உட்கார்ந்து பேரறிஞர் அண்ணா,நாவலர்,கலைஞர்,மதியழகன் ஆகிய தி.மு.க.தலைவர்களுக்கு கடிதங்கள் எழுதுகிறான்.


"இந்திய அரசின் ஏகாதிபத்திய கொள்கையை எதிர்த்து நான் தீக்குளிக்கப் போகிறேன்.தமிழுக்காக நான் என்னுயிரைத் தியாகம் செய்கிறேன்."என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு இரவு ஒரு மணிக்கு மேல் விருகம்பாக்கம் நேஷனல் திரையரங்கம் அருகே சென்று மண்ணெண்ணையை தன் உடலில் ஊற்றித் தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டு தன் தேக்குமர தேகத்தை தீக்குத் தந்துவிட்டு தியாகியானான் விருகம்பாக்கம் அரங்கநாதன்.


தமிழுக்கு தன்னை அர்ப்பணித்த அரங்கநாதனுடைய உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராஜேந்திரனை தி.மு.கழகம் தலைமைக் கழக பிரதிநிதியாக அனுப்பி வைத்தது.மறைந்த அந்த மகத்தான தியாகியின் பெயரில் கலைஞர் அவர்கள் பாலம் ஒன்றினை சென்னையில் அமைத்தார்.அவனுடைய நினைவைப் போற்று வகையில் விருகம்பாக்கம் விநாயகா சாலையில் கல்லறை அமைக்கப்பட்டு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.